Sunday, July 28, 2013

எனக்கும் ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள நாமக்கல் சிபி அவர்களுக்கு,
உங்கள் முன்னாள் வாசகன் எழுதுவது. என்னைப் பற்றி முதலில் கூறிக் கொள்கிறேன். என் பெயர் வத்லகுண்டு வாசுதேவன். சுருக்கமாக வ.வாசு என்று அழைப்பார்கள். இணையத்தில் ஒரு நாள் எதையோ தேடிக்கொண்டிருந்த பொழுது தங்கள் தளமான "பிதற்றல்கள்" வாசிக்க நேர்ந்தது. சுவாரசியம் மிகுந்ததாகப் படவே அன்று முதல் உங்கள் தளத்திற்கான சுட்டியை புக் மார்க் செய்து கொண்டு தினமும் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க என்பது கூட தவறு. சுவாசிக்க ஆரம்பித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்! 

உங்கள் எழுத்துக்களில் அப்படியொரு ரசனை, அப்படியொரு சுவாரசியம். தினந்தோறும் உங்கள் தளத்தைப் பார்வையிடாது என்னால் உறங்க முடியாது என்ற அளவிற்கு தங்கள் ரசினகாகிப் போயிருந்தேன். படித்தவற்றை நினைத்துப் பார்த்து அலுவலக நேரத்தில் திடீரென்று தனியாகச் சிரித்து சக அலுவலர்களின் விநோதப் பார்வைக்கும் ஆளாகியிருக்கிறேன்! 

இப்படியாக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்வில் திடீரென இடியாக இருந்தது ஒரு நாள்! அன்றிலிருந்து உங்கள் தளம் காணாமல் போயிருந்தது. என் வாழ்வே இருளடைந்து, வெற்றிடமாகி விட்டதாக உணர்ந்த நான், அன்றிலிருந்து பைத்தியமாகத் திரிந்து கொண்டிருந்தேன். நான் நானாகவே இருக்கவில்லை! கலங்கரை விளக்கம் காணாத கப்பல் போன்று தத்தளித்துக் கொண்டிருந்தேன். என்ன சார் ஆனது? ஏன் அப்படிச் செய்து விட்டீர்கள்? உங்கள் வாசகர்கள் மீது உங்களுக்கு கொஞ்சமேனும் இரக்கம் இருக்கவில்லையா? 

ம்ம்.சரிதான். உங்கள் சூழ்நிலை என்னவோ? யார் கண்டது! உங்களிடம் கோபித்துக் கொள்வதில் எவ்வித நியாயமும் இல்லைதான்! கடந்த நான்கைந்து ஆண்டுகளாக உங்கள் தளம் என்றேனும் காணக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ஏறாத கோவில் இல்லை! சுற்றாத பிரவுசிங்க் செண்டர்கள் இல்லை! இணைய இணைப்பே இல்லாத கணிணி என்றாலும் கூட முதலில் நான் பிரவுசரைத் திறந்து பிதற்றல்கள் தளத்திற்கான சுட்டியைக் கொடுத்துப் பார்ப்பதே என் வழக்கமாக இருந்தது. 

வான் பார்த்த நிலமாக வறண்டு கிடந்த மண் மீது கோன் பார்த்து கொட்டிய மழையாக இன்று மீண்டும் சிபி என்ற தளத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதும் என்னையுமறியாமல் "ஹூர்ரே" என்று கத்தி விட்டேன். 
தங்கள் பழைய படைப்புகளை அங்கே காண இயலாவிடினும் கூட உங்கள் எழுத்துக்கள் என்ற ஒன்றை இனி தினமும் நான் வாசிக்கும் வசதி உள்ளதே என்ற பேருவகையில் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். 
இனி உங்களுக்கு வாரமொருமுறையேனும் மடல் வரையத் திட்டமிட்டிருக்கிறேன். ஆதலால் இதனை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ஒரு அன்பான கட்டளையுடன்.
"மீண்டும் முன்பு போல் உங்கள் தளத்தை அழித்துவிட்டுச் சென்றுவிடாதீர்கள். எப்பொழுதும் எங்களுடன் தொடர்பில் இருங்கள் உங்கள் எழுத்துக்களின் வழியாக!"

இப்படிக்கு,
உங்கள் எழுத்துக்களின் வாயிலாக
வாழ்ந்து வரும்,
வத்லகுண்டு வாசுதேவன்! 

(யாரும் எழுதாட்டி என்ன? நமக்கு நாமே திட்டத்தின் படி நானே எழுதியது)

1 comment:

  1. உஙக்ள் எழுத்ஹ்டுக்கு என்ன குறை. நான் எழுதுகிறேன். ஆயிரம் கடிதம்

    ReplyDelete