Tuesday, June 3, 2014

எலிஜிபிள் பேச்சிலர்ஸ் க்கான 10 டிப்ஸ்

1.மனைவியாக வருபவர்க்கு நாம் மட்டுமே உலகம். அவர் பேசுவதை காது கொடுத்து  கேட்க நாம் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். எப்ப பார்த்தாலும் நொய்யி நொய்யின்னு உயிரை எடுக்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

2. திருமணத்திற்கு முன்பு/திருமணமான புதிதில் எவ்வளவு ஆசையாகவும்/அனுசரணையாகவும் அவரிடம் எப்படிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். திருமணமான சில நாட்களில் அவ்வாறு பேசுவதை உடனடியாக/ஒரே அடியாக குறைக்காதீர்கள். 
அப்படிப் பேசிக் கொண்டிருப்பதும் யதார்த்த வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதை அவர்களே புரிந்து கொள்ளும் வரை கொஞ்சம் பொறுத்துக் கொண்டிருங்கள்.

3. திருமணத்திற்கு முன்பு வரை உங்கள் வீட்டினருடன் குறிப்பாக உங்கள் அம்மாவிடம் அதிகமாக அளவளாவி இருந்திருப்பீர்கள். புது உறவு வந்தவுடன் அவர்களிடம் பேசுவதையும் உடனடியாக குறைத்து விடாதீர்கள். திடீரென்று பேச்சு வார்த்தை குறைந்தால் புதுசா வந்தவ என் புள்ளையை என்னிடம் இருந்து பிரிச்சிக் கொண்டு போயிட்டா என்றெல்லாம் எண்ணம் வரக் கூடும். அது அவர்களிடையே இருக்கும் உறவை சிக்கலாக்கி விடக் கூடும். இருவருடனும் திடீர் இடைவெளி ஏற்படாதவாறு சமயோசிதமாக பார்த்துக் கொள்ளுங்கள்!

4. ஒரு போதும் உங்கள் வீட்டு பழைய பிரச்சனைகளை / பிரச்சினைக்குரிய நிகழ்வுகளைப் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.  அதே போல அவர்கள் வீட்டு பழைய விஷயங்களிலும் அதீத ஆர்வம் காட்டாதீர்கள். ஜஸ்ட் லிசன்.

5. நாளடைவில் அப்படி/இப்படி என்று மனைவி - மாமியாருக்குள் ஒருவருக்கொருவர் குறை சொல்லத் துவங்கக் கூடும்.  உடனடியாக நீங்கள் ரியாக்ட் செய்யத் தேவையில்லை. நீங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டு பிறகு விட்டு விட வேண்டும். நீங்கள் ஒருவேளை தலையிட்டு பெரிது படுத்தி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். அடுத்த நாள் காலையிலேயே அவர்களிருவரும் அன்னியோன்யமாக ஆகி விடுவார்கள். நீங்கள் எங்கேனும் ஹோட்டலை தேட வேண்டிய  நிலை வந்தாலும்  வரலாம்.

6. உங்கள் மனைவியின் வீட்டு உறவினர்களையும் உங்கள் வீட்டு உறவினர்களைப் போலவே மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் உபசரிப்பதில்தான் உங்கள் மனைவியிடம் இருந்து  உங்களுக்குக் கிடைக்கும் உபசரிப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். 

7. மனைவியின் முன்னாள் அம்மாவின் சமையலையோ அம்மாவின் முன்னால் மனைவியின் சமையலையோ பெரிதும் புகழ்ந்து பேசி பாராட்டிக் கொண்டிருக்காதீர்கள். புத்திசாலித்தனமாக என் அம்மாவின் கைப்பக்குவம் போலவே அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிடலாம். ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பேசி ஒருவரை மட்டம் தட்டுவது போன்ற உரையாடல்களை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள்.

8. முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய சமயங்களில் இருவரிடமும் ஆலோசனை கேளுங்கள். ஆனால் முடிவுகளை கூடுமானவரை நீங்களே எடுங்கள்.

9. வீட்டிற்கு பலகாரங்கள் வாங்கி வரும்போது "அவ உங்களுக்காக வாங்கி வரச் சொன்னா" என்று அம்மாவிடமும், "அம்மா உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி வரச் சொன்னாங்க" என்று உங்கள் மனைவியிடமும் சொல்லிக் கொடுங்கள். பொய்யென்று தெரிந்தாலும் ஒரு கணம் அவர்கள் மனதில் மகிழ்ச்சி இழையோடும்.

10. அம்மாவிடம் "அசடு/பொண்டாட்டி தாசன்"  என்றோ மனைவியிடம் "சரியான அம்மாஞ்சி/அசமஞ்சம்" என்றோ பெயரெடுப்பதைப பற்றி கவலை கொள்ளாதீர்கள். அதுதான் நிம்மதியான வாழ்க்கை. நாளடைவில் அது உங்களுக்கு வைக்கப் பட்ட செல்லப் பெயராகக் கூட மாறலாம்.