Sunday, July 14, 2013

தந்தி - என் நினைவுக் குறிப்பு!



நான் பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்த சமயம். ஒரு நாள் வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் எனக்கு ஒரு கடிதம் வந்திருப்பாக எங்கள் வீட்டில் கொடுத்தனர். கவரைப் பிரித்தேன். ஒரு வெள்ளைத் தாளில் எழுதப்பட்டிருந்த கடிதமும் அதனுள் மடித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து ரூபாய்த்தாளும் இருந்தது. எனது (+1,+2)நண்பன் நவலடியான் கோவையிலிருந்து எழுதியிருந்தான்.

கடிதத்தில் தனக்கு ஒரு தந்தி அனுப்புமாறும் அதில் அவசரமாகப் புறப்படு வருமாறு குறிப்பிடும்படியும் எழுதி இருந்தான். மேலும் அந்தத் தந்தி தனது பெற்றோரிடமிருந்து அனுப்பியதாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏதேனும் பெண் பிள்ளைகள் விஷயத்தில் மாட்டிக் கொண்டானோ என்றெல்லாம் யோசித்துவிட்டு சரி இனி தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து  தந்தி அலுவலகத்திற்குச் சென்றேன். வழக்கமான பாணியில் ஸ்டார்ட் இம்மீடியட்லி என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் முடித்து விட்டு அவனது தந்தை பெயரில் கையொப்பமிட்டு அனுப்பி விட்டேன்.

இரண்டொரு வாரங்கள் கழித்து நாமக்கல்லில் அவனைச் சந்தித்தேன். அப்படியென்ன பிரச்சினை என்று விசாரித்தேன். நகைப் பட்டறைப் பயிற்சிக்காக அவனை கோவை அனுப்பியிருக்கின்றனர். அவனோ வேண்டா வெறுப்பாகச் சென்றிருக்கிறான். தங்கள் அனுமதியின்றி அவனை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று தங்கள் உறவினர் வீட்டில் சொல்லி இருக்கின்றனர் அவனது பெற்றோர். அதனால் இந்த ஐடியாவை செயல் படுத்தி இருக்கிறான். முழுதாக சொல்லி முடித்ததும் "அட! இதை கடிதத்திலேயே எழுதித் தொலைப்பதற்கு என்ன? நான் என்னவோ ஏதோ என்று பதட்டப் பட்டேன்" என்று அவனிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டேன்!

இரண்டொரு வருடங்கள் கழித்து அவனது அண்டை வீட்டில் இருந்த இன்னொரு நண்பர் கபீர் முகம்மது(இவர் என்னுடன் பாலி டெக்னிக்கில் படித்த நண்பர், நவலடியான் மூலமாக அறிமுகமானவர்)வுடன் பேசிக்கொண்டிருந்த போது நவலடியானைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் தற்போது வீடு மாறிச் சென்று விட்டதாகவும் அவர்களுடன் அவ்வளவாகப் பேச்சு வார்த்தை இல்லை எனவும் சொன்னான். என்ன ஆச்சு என்று விசாரித்தேன். சில வருடங்களுக்கு முன்பு கோவையில் இருந்த அவனை யாரோ போலித் தந்தி கொடுத்து வரவைத்ததாகவும்,அந்த வேலையைச் செய்தது இவன்தான்(கபீர் முகம்மது) செய்ததென்று நினைத்து நவலடியானின் அம்மா இவனைத் திட்டியதாகவும் கூறினான்.  அடப்பாவி! அதைச் செய்தது நானாச்சே! நீ மாட்டிக் கொண்டாயா என்று கேட்டுவிட்டுச் சத்தமாகச் சிரித்தேன்!
  

No comments:

Post a Comment