Monday, July 22, 2013

ஊதி (எ) விசில்



அவன் ஒரு நாள் தன் பெற்றோருடன் திருவிழாவிற்குச் சென்று வரும்போது விளையாடுவதற்கு நாலணா விலையில் உட்புறம் இலந்தைப் பழக் கொட்டை போடப்பட்ட விசில் ஒன்றை வாங்கி வந்திருந்தான். அன்று மாலை அவனுடன் விளையாட பக்கத்து வீட்டு ரமேஷ் வந்திருந்தான்.

அவன் வீட்டில் பெரிய மரக்கட்டில் ஒன்று தாழ்வாரத்தில் போடப்பட்டிருக்கும்! அதில்தான் அவன் பெரும்பாலும் பஸ் விளையாட்டு விளையாடுவது வழக்கம்! அன்று அவன் கையில் ஊதி (எ) விசில் இருப்பதைப் பார்த்த ரமேஷ் அவனை பஸ் விளையாட்டுக்கு அழைத்தான்.

அவன் சொன்னான். "சரி! நான்தான் கண்டக்டர்! நீ டிரைவர்"
ரமேஷ் : "ம்ம்! அப்போ டிரைவரே விசில் ஊதி வண்டியை நிறுத்துவார். பின் அவரே விசில் ஊதி வண்டியை ஸ்டார்ட் செய்வார்"
(ரமேஷுக்கு அந்த விசிலை வாங்கி ஊதிப் பார்க்க வேண்டும்)
அவன் : "அப்படியே ஆகட்டும். அப்போ நாந்தான் டிரைவர். நீ கண்டக்டர்"
ரமேஷ் :"அப்ப கண்டக்டர்தான் விசில் ஊதுவாராம் டிரைவர் வண்டியை ஓட்டுவாராம்"
அவன்:"அப்படின்னா முதல்ல சொன்ன மாதிரி நானே கண்டக்டர். நீ டிரைவர். ஆரம்பிக்கலாமா?"

சில நிமிடங்களுக்குப் பிறகு
ரமேஷ்: "நான் வெளாட்டுக்கு வரலை. வீட்டுக்குப் போறேன்"

அவனுக்கும், ரமேஷுக்கும் அப்போது ஆறு வயதுதான்.
அந்த அவன் யாரென்பது நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment