Friday, July 19, 2013

குன்னுடையான் கதை!

அப்போதெல்லாம் எங்களூர் அன்னமார் கோவில் வளாகத்தில்தான் குன்னுடயான் கதை நடக்கும்! நான் சொல்வது என்னுடைய 6-7 வயது இருக்கும்போது.

வீட்டிலிருந்தே கோணிப்பையை கையோடு எடுத்துச் சென்றுவிடுவோம். தரையில் விரித்து அமர்ந்து கொள்ள. இரவு உணவை முடித்துவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பினால் திரும்பிவர நள்ளிரவைத் தாண்டியிருக்கும்! இதுபோல ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் போல நடக்கும்! ஊர்ச்சந்தையை அடுத்து இந்த அன்னமார் கோவில் இருக்கும்!

கோவிலின் வெளியே பெரிய  குதிரை மீது அய்யனாரோ/கருப்பனாரோ கம்பீரமாக வீற்றிருப்பார்.

குன்னுடையான் கதை என்றால் பொன்னர் சங்கர் கதைதான்! கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வேடமிட்டுக் கொண்டு கணீர்க்குரலில் பாடி நடிப்பார்கள்! உடுக்கையொலியும் பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும்! சிலிர்ப்பாக இருக்கும்!

இந்தக் கூத்தில் நடிப்பவர்கள் அனைவருமே சுத்தமாக இருந்து விரதம் இருந்து நடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டதுண்டு! வருடம் தவறாமல் வீரப்பூர் சென்று வழிபடுவார்கள் என்றும் சொல்வார்கள்.

படுகளக் காட்சியென்று கடைசி நாளில் ஒரு காட்சி உண்டு. அன்று பார்வையாளர்கள் பலருக்கும் சாமி வரும்!


நாமக்கல்லுக்கு நாங்கள் குடிபெயர்ந்த சில வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டருகில் இருந்த பகவதி அம்மன் கோவிலில் அந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். ஓரிரு வருடங்கள் தினந்தோறும் பார்த்திருக்கிறேன்!



(நாமக்கல் மாட்டம் மணியனூரில் ஒரு அண்ணமார் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் வளாகத்தில்தான் நான் இந்நாடகத்தை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்)

No comments:

Post a Comment