"சேகர்! கவனமாகக் கேள்! இரவு 12.33 மணிக்குள் நீ அவ்விடத்தைக் கடந்துவிட்டிருக்க வேண்டும்! ஒரு நொடி தாமதித்தாலும் இக்குறிப்பிட்ட நட்சத்திரம் முடிந்துவிட்டிருக்கும்! பிறகு தீயசக்திகளின் ஆதிக்கம் உன்னைப் பீடிக்கத் துவங்கி விடும்! புரிகிறதா?"
"புரிகிறது சுவாமி!" என்றான் சேகர். முகம் முழுக்க திகில் படர்ந்திருந்தது.
ஜடாமுடியுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் தன் இருப்பிடத்திலிருந்து எழுந்தார். கூரிய விழிகளால் சேகரின் முகத்தை உற்று நோக்கியவாறு தன் கையில் இருந்த ஒரு யந்திரத்தை சேகரிடம் நீட்டினார்.
"இதனை வைத்துக் கொள்! துணையாக இருக்கும். நினைவில் இருக்கட்டும்! 12.33 ஒரு நொடியும் தாமதிக்கலாகாது! எச்சரிக்கை".
........
ஊய் ஊய் என்ற பலத்த காற்றைக் சமாளித்தவாறே அந்த காட்டுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் சேகர். புழுதி பறந்து கண்களை வேறு மறைத்தது! கும்மிருட்டில் தன் மொபெட்டின் குறைவான வெளிச்சத்தில் பாதையைக் கண்டுபிடித்து வாகனத்தை விரட்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது வெட்டிய மின்னலும் இவனுக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது!
கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.15! இன்னும் கால் மணி நேரமே இருக்கிறது, ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகத்தை அதிகப் படுத்தினான். கரடு முரடான ஒற்றையடிப் பாதையில் மொபெட் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது.a
ஏதோ ஒரு பெரிய கல்லின் மேல் வண்டி ஏறி இறங்கியது போலிருந்தது. அத்துடன் மொபெட்டின் எஞ்சின் உயிரிழந்து வண்டியின் வேகம் அப்படியே குறைந்து மெதுவே தன் ஓட்டத்தினை நிறுத்திக் கொண்டது.
"ச்சே! இது என்ன புது சோதனை?"
மணி பார்த்தான்! 12.23! இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன! அதற்குள் கடக்க வேண்டும்! எவ்வளவு தொலைவென்று இருட்டில் கணக்கிட முடியவில்லை!
இதயம் குப் என்று அடைத்துக் கொண்டது. நாக்கு வறண்டு விட்டிருந்தது.
"பிரதர்! ஏதும் பிரச்சினையா?" திடுக்கிட்டுத் திரும்பினான்.
இருட்டில் மசமசப்பாக உருவம் தெரிந்தது. அப்பொழுது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் மனித உருவம்தான் என்று தெரியவர கொஞ்சம் நிம்மதியானான்.
அதற்குள் அவனாகவே மொபைட்டை வாங்கி இரண்டே உதையில் இஞ்சினை உயிர்ப்பித்தான்.
"பிரதர்! நீங்க பதட்டமா இருக்கீங்கன்னு நினைக்கிறென்! உக்காருங்க! வண்டியை நான் ஓட்டுறேன்"
ஒன்றும் பேசத் தோன்றாமல் எதற்கோ கட்டுப்பட்டவன் போல் பின்னால் ஏறி அமர்ந்தான் சேகர்.
இந்தக் காட்டுப் பாதையில் பழக்கப் பட்டவன் போல லாவகமாக அதே சமயம் இவனின் எண்ணம் அறிந்தாற்போல் வேகமாகவும் வண்டியை முடுக்கிக் கொண்டிருந்தான் அவன்.
எவ்வளவு தொலைவு கடந்திருப்பார்கள் என்று தெரியவில்லை! தன்னிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.30!
"ஐயோ! இன்னும் மூன்றே நிமிடங்கள்"
வண்டி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
தொலைவில் இலேசான வெளிச்சத்தில் பாதையின் முடிவு தெரிந்தது!
ஆ! அதோ! இன்னும் சில மீட்டர்கள்தான்! அடைந்துவிடலாம்! அவர் சொன்ன எல்லையைக் கடந்துவிடலாம்!
12.32!
இவன் எண்ணி முடிப்பதற்குள் எல்லையைத் தொடும் ஒன்றிரண்டு அடிகளுக்கு முன்னால் சட சடவென ஒரு மரம் முறிந்து விழுந்து பாதையை மூடிக் கொண்டிருந்தது. வண்டியை அந்த இடத்திலேயே நிறுத்தினான் அவன்!
ஐயோ! சோதனையின் உச்ச கட்டம் இது! ஒரு நிமிடத்திற்குள் அவ்விடத்தைக் கடந்தாக வேண்டும்!
12.32.20!
"கவலைப் படாதீங்க பிரதர்! மரத்தைத் தூக்கிப் போட்டுட்டு போயிக் கொண்டே இருக்கலாம்!"
"என்ன உளறுகிறான் இவன்! பத்து பேர் சேர்ந்தாலும் தூக்கச் சாத்தியமில்லாத மரமல்லவா முறிந்து கிடக்கிறது! இறங்கி ஓட வேண்டியதுதான்" என எண்ணிக் கொண்டே வண்டியைப் பற்றிக் கவலை கொள்ளாது எல்லையை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான் சேகர்!
மரத்தின் அருகாமையை அடைந்தபோதுதான் கவனித்தான். மரம் மெல்ல மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தது! வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவன் பத்தடி தொலைவிற்கு அப்பாலிருந்தே தன் கையை நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்டி அம்மரத்தை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தான்!
Haiyaa!
ReplyDelete