Thursday, April 2, 2015

சின்ன வயசுலே ரொம்பச் சின்ன வயசுலே...!

ரொம்ப நாள் கழிச்சி மீண்டும் வலைப்பூவில் எழுதுகிறேன். டச் விட்டுப் போனதில கொஞ்சம் ஆங்காங்கே ஜெர்க் ஆகலாம். மனிதாபிமானத்தோட மன்னிச்சிட மக்கழே!

*****************************************************************************

கிபி..1980 மணியனூர், நாமக்கல் மாவட்டம்.

எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து எனக்கு கிடைச்ச முதல் ஃபிரண்ட் ஸ்ரீதர். அவனோட அப்பா ஒரு போஸ்ட் மாஸ்டர். அவங்க வீட்டுலயேதான் போஸ்ட் ஆஃபீசும். அவங்க வீட்டு வாசலுக்கு ரெண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். இடது புறம் இருக்கும் திண்ணைல ஒரு பெரிய மரத்தாலான மேசை இருக்கும். போஸ்ட் ஆபீஸ் மேசை. நல்ல கனமா இருக்கும். ஒரு பக்கம் கப்போர்ட் வெச்சது. மறுபுறம் அடில காலியா இருக்கும். அதுதான் எங்களுக்கு(எனக்கும் ஸ்ரீதருக்கும்) கார்.

லீவு நாட்களில் அங்கேதான் விளையாடுவோம். டக் டக் என்று காரின் கதவுகளை திறந்து மூடும் சப்தங்கள் எல்லாம் பிரசாத் ஸ்டுடியோ இல்லாமலே எங்கள் வாயாலேயே டப்பிங்க் செய்து கொள்வோம்.

இந்த விளையாட்டு எவ்ளோ நாள் விளையாண்டாலும் எங்களுக்குப் போரடிச்சதில்லை. இருப்பினும் எங்களுக்கு ஒரு நாள் திடீர்னு புது விளையாட்டு கிடைச்சது.

திண்ணை மேல இருந்து தண்ணீர் சேந்தும்(கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும்) விளையாட்டு. ஒருத்தர் திண்ணைக்குக் கீழே படுத்துக்கணும். திண்ணை மேலிருந்து ஒருத்தர் தண்ணீர் இறைக்கணும். அப்போ கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துட்டு ஐயய்யோ கிணத்துக்குள்ளே பொணம் கிடக்குதுன்னு கத்திகிட்டு ஓடணும்.

சில நாட்கள் நான் பிணமாகவும் சில நாட்கள் அவரு பிணமாகவும்னு மாறி மாறி விளையாடுவோம். ஒரு முறை சந்தைல இருக்கும் பொதுக் கிணற்றில் பிணம் மிதக்குதுன்னு ஊர் பூரா பேசிகிட்டத்தைக் கவனிச்ச சிறுசுங்க மனசுல விசுவலைஸ் பண்ணி உருவாக்கின விளையாட்டு இது.

அப்புறம் அப்படி இப்படின்னு என்னைப் பால்வாடில சேர்த்து விட்டாங்க. ஸ்ரீதர் ஒண்ணாவது. நான் பால்வாடி. அவரு என்னை விட ஒரு வருஷம் சீனியராம். எனக்கு அந்தப் பால்வாடில இருக்குற ஆயாவைக் கண்டா எப்படி இருக்குமோ தெரியாது.. வீல்னு கத்திகிட்டே பின்னங்கால் பிடறி பட ஓடியாந்துடுவேன்.


ஒரு வேளை குழந்தையா இருந்தப்போ நான் குறும்புகள் செய்யும்போது பால்வாடி ஆயாகிட்டே பிடிச்சிக்குடுத்துவோம்ணு பயமுறுத்தி வெச்ச விளைவுகளா இருக்கலாம். இப்போ நினைச்சா பாவமா இருக்கு. அஞ்சலிப் பாப்பாவை அணுக முயற்சிக்கும் ரேவதியா உணர்ந்திருப்பாங்களோன்னு.

எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னை பால்வாடில உக்கார வெக்க முடியலை. நாலைஞ்சு பேரு சேர்ந்து கையை ரெண்டு பேர் காலை ரெண்டு பேர் எல்லாம் பிடிச்சிப் பால் வாடில கொண்டுபோயி விட்டுட்டு வந்தாக் கூட அவங்க வந்து சேர்வதற்குள் நான் திரும்ப வந்து சேர்ந்திருப்பேன்.

சரிதான் இவனுக்கும் பால்வாடிக்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லைபோலன்னு எங்கப்பா என்னை ஒண்ணாம் வகுப்புல போயி உக்கார வெச்சாரு. எங்கப்பாதான் அந்த ஸ்கூல்ல(ஆர்.சி.துவக்கப்பள்ளி, மணியனூர்) தலைமை ஆசிரியர். புலி அட்டைப் படம் போட்ட தமிழ் புக்கும் ஒரு ஸ்லேட்டும் ஒரு மஞ்சப் பைல போட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வெச்சாங்க. பக்கத்து வீட்டில் இருக்கும் சந்தை வாட்ச்மேனோட பொண்ணு சம்பூர்ணாக்காதான் முத முதல்ல ஸ்கூலுக்கு போறே, கோயிலுக்கு போயிட்டு போலாம்னு விபூதியெல்லாம் பூசி அனுப்பி வெச்சாங்க. அப்போ எனக்கு தெரியாது இது அஃபிஷியல் அட்மிஷன் இல்லை. ஒப்புக்குச் சப்பாணின்னு.


.... தொடரும்.

Tuesday, June 3, 2014

எலிஜிபிள் பேச்சிலர்ஸ் க்கான 10 டிப்ஸ்

1.மனைவியாக வருபவர்க்கு நாம் மட்டுமே உலகம். அவர் பேசுவதை காது கொடுத்து  கேட்க நாம் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். எப்ப பார்த்தாலும் நொய்யி நொய்யின்னு உயிரை எடுக்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

2. திருமணத்திற்கு முன்பு/திருமணமான புதிதில் எவ்வளவு ஆசையாகவும்/அனுசரணையாகவும் அவரிடம் எப்படிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். திருமணமான சில நாட்களில் அவ்வாறு பேசுவதை உடனடியாக/ஒரே அடியாக குறைக்காதீர்கள். 
அப்படிப் பேசிக் கொண்டிருப்பதும் யதார்த்த வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதை அவர்களே புரிந்து கொள்ளும் வரை கொஞ்சம் பொறுத்துக் கொண்டிருங்கள்.

3. திருமணத்திற்கு முன்பு வரை உங்கள் வீட்டினருடன் குறிப்பாக உங்கள் அம்மாவிடம் அதிகமாக அளவளாவி இருந்திருப்பீர்கள். புது உறவு வந்தவுடன் அவர்களிடம் பேசுவதையும் உடனடியாக குறைத்து விடாதீர்கள். திடீரென்று பேச்சு வார்த்தை குறைந்தால் புதுசா வந்தவ என் புள்ளையை என்னிடம் இருந்து பிரிச்சிக் கொண்டு போயிட்டா என்றெல்லாம் எண்ணம் வரக் கூடும். அது அவர்களிடையே இருக்கும் உறவை சிக்கலாக்கி விடக் கூடும். இருவருடனும் திடீர் இடைவெளி ஏற்படாதவாறு சமயோசிதமாக பார்த்துக் கொள்ளுங்கள்!

4. ஒரு போதும் உங்கள் வீட்டு பழைய பிரச்சனைகளை / பிரச்சினைக்குரிய நிகழ்வுகளைப் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.  அதே போல அவர்கள் வீட்டு பழைய விஷயங்களிலும் அதீத ஆர்வம் காட்டாதீர்கள். ஜஸ்ட் லிசன்.

5. நாளடைவில் அப்படி/இப்படி என்று மனைவி - மாமியாருக்குள் ஒருவருக்கொருவர் குறை சொல்லத் துவங்கக் கூடும்.  உடனடியாக நீங்கள் ரியாக்ட் செய்யத் தேவையில்லை. நீங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டு பிறகு விட்டு விட வேண்டும். நீங்கள் ஒருவேளை தலையிட்டு பெரிது படுத்தி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். அடுத்த நாள் காலையிலேயே அவர்களிருவரும் அன்னியோன்யமாக ஆகி விடுவார்கள். நீங்கள் எங்கேனும் ஹோட்டலை தேட வேண்டிய  நிலை வந்தாலும்  வரலாம்.

6. உங்கள் மனைவியின் வீட்டு உறவினர்களையும் உங்கள் வீட்டு உறவினர்களைப் போலவே மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் உபசரிப்பதில்தான் உங்கள் மனைவியிடம் இருந்து  உங்களுக்குக் கிடைக்கும் உபசரிப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். 

7. மனைவியின் முன்னாள் அம்மாவின் சமையலையோ அம்மாவின் முன்னால் மனைவியின் சமையலையோ பெரிதும் புகழ்ந்து பேசி பாராட்டிக் கொண்டிருக்காதீர்கள். புத்திசாலித்தனமாக என் அம்மாவின் கைப்பக்குவம் போலவே அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிடலாம். ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பேசி ஒருவரை மட்டம் தட்டுவது போன்ற உரையாடல்களை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள்.

8. முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய சமயங்களில் இருவரிடமும் ஆலோசனை கேளுங்கள். ஆனால் முடிவுகளை கூடுமானவரை நீங்களே எடுங்கள்.

9. வீட்டிற்கு பலகாரங்கள் வாங்கி வரும்போது "அவ உங்களுக்காக வாங்கி வரச் சொன்னா" என்று அம்மாவிடமும், "அம்மா உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி வரச் சொன்னாங்க" என்று உங்கள் மனைவியிடமும் சொல்லிக் கொடுங்கள். பொய்யென்று தெரிந்தாலும் ஒரு கணம் அவர்கள் மனதில் மகிழ்ச்சி இழையோடும்.

10. அம்மாவிடம் "அசடு/பொண்டாட்டி தாசன்"  என்றோ மனைவியிடம் "சரியான அம்மாஞ்சி/அசமஞ்சம்" என்றோ பெயரெடுப்பதைப பற்றி கவலை கொள்ளாதீர்கள். அதுதான் நிம்மதியான வாழ்க்கை. நாளடைவில் அது உங்களுக்கு வைக்கப் பட்ட செல்லப் பெயராகக் கூட மாறலாம்.

Thursday, August 8, 2013

வளஞ்செய்கின்றன!

இந்த வளஞ்செய்கின்றன  என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒரு பிளாஷ் பேக் இருக்கு!
நான் நாலாம்பு அட்மிஷனுக்கு நாமக்கல் டவுன் இஸ்கூலுக்கு வந்தப்போ கிராமத்துல படிச்ச பையன் சரியா படிக்க மாட்டான்  என்று சொல்லி எங்க இருதய மேரி டீச்சர் தன வகுப்புல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.  இத்தனைக்கும் என் அம்மா, என் அப்பா இருவருமே அதே நிர்வாகத்தின் பள்ளியில் ஆசிரியர்கள். நான் சேர வந்த டவுன் இஸ்கூலுக்குத்தான் அன் அம்மாவுக்கும் டிரான்ஸ்பர் ஆகி இருந்தது. சக டீச்சரோட பையன் என்று கூட பார்க்காம எங்க டீச்சர் தன்னுடைய குவாலிட்டில கறாரா இருந்தாங்க. 

இருப்பினும் டவுன் இஸ்கூலின் தலைமை ஆசிரியர் சத்தியநாதன் அவர்கள் கொஞ்ச நாளுக்கு உங்க கிளாஸ்ல இருக்கட்டும். அதன் பிறகும் பையன் தேறலைன்னா வேற கிளாஸ்க்கு மாத்தி விடுறேன் என்று சமாதானப் படுத்தி அனுப்பி வெச்சார்

நான் சேர்ந்த இரண்டாம் நாளோ அல்லது மூன்றாம் நாளோன்னு நினைக்கிறேன். சேர்த்து எழுது என்ற பகுதியில் வளம் + செய்கின்றன  இதுக்கு விடை என்ன வரும்னு கேட்டாங்க. வகுப்பே முழிச்சது. அவங்க பார்வைல நல்லாப் படிக்கும் நகரத்துப் பசங்ககிட்டே எல்லாம் கேட்டாங்க. எவனுக்கும் தெரியல. நான் தானா முன்வந்து கையை உயர்த்தினேன்,
எங்கே சொல்லு பார்க்கலாம் என்று சொன்னாங்க "வளஞ்செய்கின்றன" என்றேன். வெரிகுட் என்று என்னைப் பாராட்டி பசங்க அத்தனை போரையும் கை தட்டச் சொன்னாங்க.


அடுத்த வாரத்தில் ஒரு நாள் துணிக் கடைக்கு ஆங்கிலத்தில் என்ன  என்று ஒரு கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதே போல அத்தனை பசங்களும் முழிக்க என் ஞாபகச் செல்களை உசுப்பி விட்டேன். திருச்செங்கோடு கடைவீதியில் அப்பாவின் கை பிடித்துக் கொண்டு நடந்த நாட்கள் நினைவில் வந்தது. அப்போவெல்லாம் வேடிக்கை பார்க்கும்போது கடையின் பெயர்ப்பலகைகளை படித்துக் கொண்டே போவது வழக்கம். பல கடைகளின் பெயர்களை ஆங்கிலத்தை தமிழில் எழுத்தில் இருப்பார்கள். அப்படி ஒன்றை படித்த பெயர் சட்டென நினைவில்  வந்தது "முருகன் கிளாத் ஸ்டோர்".

இன்றும் நானாக கையை உயர்த்தினேன். முதல் ஆளாக. "கிளாத் ஸ்டோர்" என்ற விடையைச்  சொல்லி   கைதட்டு வாங்கினேன். அதன் பிறகு தலைமை ஆசிரியடம் சென்று வேறு வகுப்புக்கு மாற்ற வேண்டாம், என் கிளாசிலேயே இருக்கட்டும் என்று தக்க வைத்துக் கொண்டார்கள் வகுப்பின் முதல் மாணவனை. 

Friday, August 2, 2013

காட்டு வழிப் பாதை!


"சேகர்! கவனமாகக் கேள்! இரவு 12.33 மணிக்குள் நீ அவ்விடத்தைக் கடந்துவிட்டிருக்க வேண்டும்! ஒரு நொடி தாமதித்தாலும் இக்குறிப்பிட்ட நட்சத்திரம் முடிந்துவிட்டிருக்கும்! பிறகு தீயசக்திகளின் ஆதிக்கம் உன்னைப் பீடிக்கத் துவங்கி விடும்! புரிகிறதா?"

"புரிகிறது சுவாமி!" என்றான் சேகர். முகம் முழுக்க திகில் படர்ந்திருந்தது.

ஜடாமுடியுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் தன் இருப்பிடத்திலிருந்து எழுந்தார்.  கூரிய விழிகளால் சேகரின் முகத்தை உற்று நோக்கியவாறு தன் கையில் இருந்த ஒரு யந்திரத்தை சேகரிடம் நீட்டினார்.

"இதனை வைத்துக் கொள்! துணையாக இருக்கும். நினைவில் இருக்கட்டும்! 12.33 ஒரு நொடியும் தாமதிக்கலாகாது! எச்சரிக்கை".

........

ஊய் ஊய் என்ற பலத்த காற்றைக் சமாளித்தவாறே அந்த காட்டுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் சேகர். புழுதி பறந்து கண்களை வேறு மறைத்தது! கும்மிருட்டில் தன் மொபெட்டின் குறைவான வெளிச்சத்தில் பாதையைக் கண்டுபிடித்து வாகனத்தை விரட்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது வெட்டிய மின்னலும் இவனுக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது!

கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.15! இன்னும்  கால் மணி நேரமே இருக்கிறது, ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகத்தை அதிகப் படுத்தினான். கரடு முரடான ஒற்றையடிப் பாதையில் மொபெட் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது.a

ஏதோ ஒரு பெரிய கல்லின் மேல் வண்டி ஏறி இறங்கியது போலிருந்தது. அத்துடன் மொபெட்டின் எஞ்சின் உயிரிழந்து வண்டியின் வேகம் அப்படியே குறைந்து மெதுவே தன் ஓட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

"ச்சே! இது என்ன புது சோதனை?"

மணி பார்த்தான்! 12.23! இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன! அதற்குள் கடக்க வேண்டும்! எவ்வளவு தொலைவென்று இருட்டில் கணக்கிட முடியவில்லை!

இதயம் குப் என்று அடைத்துக் கொண்டது. நாக்கு வறண்டு விட்டிருந்தது.

"பிரதர்! ஏதும் பிரச்சினையா?"  திடுக்கிட்டுத் திரும்பினான்.
இருட்டில் மசமசப்பாக உருவம் தெரிந்தது. அப்பொழுது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் மனித உருவம்தான் என்று தெரியவர கொஞ்சம் நிம்மதியானான்.

அதற்குள் அவனாகவே மொபைட்டை வாங்கி இரண்டே உதையில் இஞ்சினை உயிர்ப்பித்தான்.
"பிரதர்! நீங்க பதட்டமா இருக்கீங்கன்னு நினைக்கிறென்! உக்காருங்க! வண்டியை நான் ஓட்டுறேன்"
ஒன்றும் பேசத் தோன்றாமல் எதற்கோ கட்டுப்பட்டவன் போல் பின்னால் ஏறி அமர்ந்தான் சேகர்.

இந்தக் காட்டுப் பாதையில் பழக்கப் பட்டவன் போல லாவகமாக அதே சமயம் இவனின் எண்ணம் அறிந்தாற்போல் வேகமாகவும் வண்டியை முடுக்கிக் கொண்டிருந்தான் அவன்.

எவ்வளவு தொலைவு கடந்திருப்பார்கள் என்று தெரியவில்லை! தன்னிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.30!
"ஐயோ! இன்னும் மூன்றே நிமிடங்கள்"

வண்டி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
தொலைவில் இலேசான வெளிச்சத்தில்  பாதையின் முடிவு தெரிந்தது!
ஆ! அதோ! இன்னும் சில மீட்டர்கள்தான்! அடைந்துவிடலாம்! அவர் சொன்ன எல்லையைக் கடந்துவிடலாம்!

12.32!
இவன் எண்ணி முடிப்பதற்குள் எல்லையைத் தொடும் ஒன்றிரண்டு அடிகளுக்கு முன்னால் சட சடவென ஒரு மரம் முறிந்து விழுந்து பாதையை மூடிக் கொண்டிருந்தது. வண்டியை அந்த இடத்திலேயே நிறுத்தினான் அவன்!

ஐயோ! சோதனையின் உச்ச கட்டம் இது! ஒரு நிமிடத்திற்குள் அவ்விடத்தைக் கடந்தாக வேண்டும்!

12.32.20!

"கவலைப் படாதீங்க பிரதர்! மரத்தைத் தூக்கிப் போட்டுட்டு போயிக் கொண்டே இருக்கலாம்!"

"என்ன உளறுகிறான் இவன்! பத்து பேர் சேர்ந்தாலும் தூக்கச் சாத்தியமில்லாத மரமல்லவா முறிந்து கிடக்கிறது! இறங்கி ஓட வேண்டியதுதான்" என எண்ணிக் கொண்டே வண்டியைப் பற்றிக் கவலை கொள்ளாது எல்லையை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான் சேகர்!

மரத்தின் அருகாமையை அடைந்தபோதுதான் கவனித்தான். மரம் மெல்ல மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தது! வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவன் பத்தடி தொலைவிற்கு அப்பாலிருந்தே தன் கையை நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்டி அம்மரத்தை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தான்!

Sunday, July 28, 2013

நானாக நானில்லை!

எப்படியோ ஒரு வழியாக அறைக்கு நடந்தே வந்து சேர்ந்திருந்தேன்! கை காலிலெல்லாம் பயங்கர வலி! தோள் பட்டையிலும்! நல்ல வேளை ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்தேன். சாலைத் திருப்பத்தில் திரும்பும்போது வேகமாக வந்த லாரியில் மோதியதில் இத்தனை காயங்களும், வலிகளும்!

என் மோட்டார் பைக் என்ன கதியாயிற்று என்று கூட பாராமல் எழுந்தோடி வந்துவிட்டேன்! சட்டையெல்லாம் கிழிந்து விட்டிருந்தது. வேறு சட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் போய் வண்டியை எடுத்து வர வேண்டும்! கூடவே மெக்கானிக்கையும் அழைத்துக் கொண்டு போனால் சேதம் எவ்வளவு என்று பார்த்து ரிப்பேர் செய்யவும் உடனே கொடுத்து விடலாம்!

அறை திறந்திருந்தது! என் அறை நண்பன் வந்துவிட்டிருக்கிறான் போலும்! அறைக்குள் அவனைக் காணவில்லை! குளியளறையிலிருந்து சத்தம் கேட்டது.

"சங்கர்.." என்று குரல் கொடுத்தேன். பதிலில்லை! மீண்டும் இரு முறை பலமாக அழைத்தேன். அப்போதும் பதிலேதும் இல்லை!

எனது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். உடலெல்லாம் வலி வியாபித்திருந்தது! அவன் வெளியே வந்ததும் ஒரு குளியல் போட்டுவிட்டு உடைகள் மாற்றிக் கொண்டு போக வேண்டும்.

சிறிது நேரத்தில் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான் சங்கர்.
"எப்படா வந்தே..?" என்று கேட்டேன்.
காதில் வாங்காதவனாய் எங்கேயோ பார்த்தவாறு தலை துவட்டிக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே இப்படித்தான். ஏதேனும் சிந்தனையில் ஆட்பட்டுவிட்டால் அருகில் இருக்கும் ஆட்கள் கூடத் தெரியாது.

அவனுடைய போன் ஒலித்தது.

"ஹலோ. சொல்றா அருண்" என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் இங்கே இருக்கிறேன். என்னிடம் பேசுவது போல யாரிடம் பேசுகிறான்? உற்றுக் கவனிக்கலானேன்.
"எப்போ..?" என்றான். அவன் கையிலிருந்த துண்டு நழுவியது.
பதற்றமடைந்தவாறே
"தோ.. இப்பவே வரேன்" என்று செல்போனை அணைத்துவிட்டு பரபரவென உடைகளை எடுத்து மாட்டினான்.
"டேய் சங்கர்! எங்கே இவ்ளோ வேகமா கெளம்புறே? ஏதும் பிரச்சினையா?" என்றேன்.
அதற்குள்ளாக வாசலைத் தாண்டிச் சென்று தனது வண்டியைச் சமீபத்திருந்தான்.

"ம்ம் வரட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று நான் குளியலுக்குத் தயாரானேன். தலையெல்லாம் ஒரே வியர்வைச்  சகதி! ரிலாக்ஸாகக் குளித்துவிட்டு தலையைத் துவட்டியவாறே கண்ணாடி அருகே வந்தேன்.

அதில் என் பிம்பம் தெரியவில்லை!

எனக்கும் ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள நாமக்கல் சிபி அவர்களுக்கு,
உங்கள் முன்னாள் வாசகன் எழுதுவது. என்னைப் பற்றி முதலில் கூறிக் கொள்கிறேன். என் பெயர் வத்லகுண்டு வாசுதேவன். சுருக்கமாக வ.வாசு என்று அழைப்பார்கள். இணையத்தில் ஒரு நாள் எதையோ தேடிக்கொண்டிருந்த பொழுது தங்கள் தளமான "பிதற்றல்கள்" வாசிக்க நேர்ந்தது. சுவாரசியம் மிகுந்ததாகப் படவே அன்று முதல் உங்கள் தளத்திற்கான சுட்டியை புக் மார்க் செய்து கொண்டு தினமும் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க என்பது கூட தவறு. சுவாசிக்க ஆரம்பித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்! 

உங்கள் எழுத்துக்களில் அப்படியொரு ரசனை, அப்படியொரு சுவாரசியம். தினந்தோறும் உங்கள் தளத்தைப் பார்வையிடாது என்னால் உறங்க முடியாது என்ற அளவிற்கு தங்கள் ரசினகாகிப் போயிருந்தேன். படித்தவற்றை நினைத்துப் பார்த்து அலுவலக நேரத்தில் திடீரென்று தனியாகச் சிரித்து சக அலுவலர்களின் விநோதப் பார்வைக்கும் ஆளாகியிருக்கிறேன்! 

இப்படியாக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்வில் திடீரென இடியாக இருந்தது ஒரு நாள்! அன்றிலிருந்து உங்கள் தளம் காணாமல் போயிருந்தது. என் வாழ்வே இருளடைந்து, வெற்றிடமாகி விட்டதாக உணர்ந்த நான், அன்றிலிருந்து பைத்தியமாகத் திரிந்து கொண்டிருந்தேன். நான் நானாகவே இருக்கவில்லை! கலங்கரை விளக்கம் காணாத கப்பல் போன்று தத்தளித்துக் கொண்டிருந்தேன். என்ன சார் ஆனது? ஏன் அப்படிச் செய்து விட்டீர்கள்? உங்கள் வாசகர்கள் மீது உங்களுக்கு கொஞ்சமேனும் இரக்கம் இருக்கவில்லையா? 

ம்ம்.சரிதான். உங்கள் சூழ்நிலை என்னவோ? யார் கண்டது! உங்களிடம் கோபித்துக் கொள்வதில் எவ்வித நியாயமும் இல்லைதான்! கடந்த நான்கைந்து ஆண்டுகளாக உங்கள் தளம் என்றேனும் காணக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ஏறாத கோவில் இல்லை! சுற்றாத பிரவுசிங்க் செண்டர்கள் இல்லை! இணைய இணைப்பே இல்லாத கணிணி என்றாலும் கூட முதலில் நான் பிரவுசரைத் திறந்து பிதற்றல்கள் தளத்திற்கான சுட்டியைக் கொடுத்துப் பார்ப்பதே என் வழக்கமாக இருந்தது. 

வான் பார்த்த நிலமாக வறண்டு கிடந்த மண் மீது கோன் பார்த்து கொட்டிய மழையாக இன்று மீண்டும் சிபி என்ற தளத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதும் என்னையுமறியாமல் "ஹூர்ரே" என்று கத்தி விட்டேன். 
தங்கள் பழைய படைப்புகளை அங்கே காண இயலாவிடினும் கூட உங்கள் எழுத்துக்கள் என்ற ஒன்றை இனி தினமும் நான் வாசிக்கும் வசதி உள்ளதே என்ற பேருவகையில் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். 
இனி உங்களுக்கு வாரமொருமுறையேனும் மடல் வரையத் திட்டமிட்டிருக்கிறேன். ஆதலால் இதனை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ஒரு அன்பான கட்டளையுடன்.
"மீண்டும் முன்பு போல் உங்கள் தளத்தை அழித்துவிட்டுச் சென்றுவிடாதீர்கள். எப்பொழுதும் எங்களுடன் தொடர்பில் இருங்கள் உங்கள் எழுத்துக்களின் வழியாக!"

இப்படிக்கு,
உங்கள் எழுத்துக்களின் வாயிலாக
வாழ்ந்து வரும்,
வத்லகுண்டு வாசுதேவன்! 

(யாரும் எழுதாட்டி என்ன? நமக்கு நாமே திட்டத்தின் படி நானே எழுதியது)

Monday, July 22, 2013

ஊதி (எ) விசில்



அவன் ஒரு நாள் தன் பெற்றோருடன் திருவிழாவிற்குச் சென்று வரும்போது விளையாடுவதற்கு நாலணா விலையில் உட்புறம் இலந்தைப் பழக் கொட்டை போடப்பட்ட விசில் ஒன்றை வாங்கி வந்திருந்தான். அன்று மாலை அவனுடன் விளையாட பக்கத்து வீட்டு ரமேஷ் வந்திருந்தான்.

அவன் வீட்டில் பெரிய மரக்கட்டில் ஒன்று தாழ்வாரத்தில் போடப்பட்டிருக்கும்! அதில்தான் அவன் பெரும்பாலும் பஸ் விளையாட்டு விளையாடுவது வழக்கம்! அன்று அவன் கையில் ஊதி (எ) விசில் இருப்பதைப் பார்த்த ரமேஷ் அவனை பஸ் விளையாட்டுக்கு அழைத்தான்.

அவன் சொன்னான். "சரி! நான்தான் கண்டக்டர்! நீ டிரைவர்"
ரமேஷ் : "ம்ம்! அப்போ டிரைவரே விசில் ஊதி வண்டியை நிறுத்துவார். பின் அவரே விசில் ஊதி வண்டியை ஸ்டார்ட் செய்வார்"
(ரமேஷுக்கு அந்த விசிலை வாங்கி ஊதிப் பார்க்க வேண்டும்)
அவன் : "அப்படியே ஆகட்டும். அப்போ நாந்தான் டிரைவர். நீ கண்டக்டர்"
ரமேஷ் :"அப்ப கண்டக்டர்தான் விசில் ஊதுவாராம் டிரைவர் வண்டியை ஓட்டுவாராம்"
அவன்:"அப்படின்னா முதல்ல சொன்ன மாதிரி நானே கண்டக்டர். நீ டிரைவர். ஆரம்பிக்கலாமா?"

சில நிமிடங்களுக்குப் பிறகு
ரமேஷ்: "நான் வெளாட்டுக்கு வரலை. வீட்டுக்குப் போறேன்"

அவனுக்கும், ரமேஷுக்கும் அப்போது ஆறு வயதுதான்.
அந்த அவன் யாரென்பது நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்!