எப்படியோ ஒரு வழியாக அறைக்கு நடந்தே வந்து சேர்ந்திருந்தேன்! கை காலிலெல்லாம் பயங்கர வலி! தோள் பட்டையிலும்! நல்ல வேளை ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்தேன். சாலைத் திருப்பத்தில் திரும்பும்போது வேகமாக வந்த லாரியில் மோதியதில் இத்தனை காயங்களும், வலிகளும்!
என் மோட்டார் பைக் என்ன கதியாயிற்று என்று கூட பாராமல் எழுந்தோடி வந்துவிட்டேன்! சட்டையெல்லாம் கிழிந்து விட்டிருந்தது. வேறு சட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் போய் வண்டியை எடுத்து வர வேண்டும்! கூடவே மெக்கானிக்கையும் அழைத்துக் கொண்டு போனால் சேதம் எவ்வளவு என்று பார்த்து ரிப்பேர் செய்யவும் உடனே கொடுத்து விடலாம்!
அறை திறந்திருந்தது! என் அறை நண்பன் வந்துவிட்டிருக்கிறான் போலும்! அறைக்குள் அவனைக் காணவில்லை! குளியளறையிலிருந்து சத்தம் கேட்டது.
"சங்கர்.." என்று குரல் கொடுத்தேன். பதிலில்லை! மீண்டும் இரு முறை பலமாக அழைத்தேன். அப்போதும் பதிலேதும் இல்லை!
எனது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். உடலெல்லாம் வலி வியாபித்திருந்தது! அவன் வெளியே வந்ததும் ஒரு குளியல் போட்டுவிட்டு உடைகள் மாற்றிக் கொண்டு போக வேண்டும்.
சிறிது நேரத்தில் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான் சங்கர்.
"எப்படா வந்தே..?" என்று கேட்டேன்.
காதில் வாங்காதவனாய் எங்கேயோ பார்த்தவாறு தலை துவட்டிக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே இப்படித்தான். ஏதேனும் சிந்தனையில் ஆட்பட்டுவிட்டால் அருகில் இருக்கும் ஆட்கள் கூடத் தெரியாது.
அவனுடைய போன் ஒலித்தது.
"ஹலோ. சொல்றா அருண்" என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் இங்கே இருக்கிறேன். என்னிடம் பேசுவது போல யாரிடம் பேசுகிறான்? உற்றுக் கவனிக்கலானேன்.
"எப்போ..?" என்றான். அவன் கையிலிருந்த துண்டு நழுவியது.
பதற்றமடைந்தவாறே
"தோ.. இப்பவே வரேன்" என்று செல்போனை அணைத்துவிட்டு பரபரவென உடைகளை எடுத்து மாட்டினான்.
"டேய் சங்கர்! எங்கே இவ்ளோ வேகமா கெளம்புறே? ஏதும் பிரச்சினையா?" என்றேன்.
அதற்குள்ளாக வாசலைத் தாண்டிச் சென்று தனது வண்டியைச் சமீபத்திருந்தான்.
"ம்ம் வரட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று நான் குளியலுக்குத் தயாரானேன். தலையெல்லாம் ஒரே வியர்வைச் சகதி! ரிலாக்ஸாகக் குளித்துவிட்டு தலையைத் துவட்டியவாறே கண்ணாடி அருகே வந்தேன்.
அதில் என் பிம்பம் தெரியவில்லை!