Thursday, August 8, 2013

வளஞ்செய்கின்றன!

இந்த வளஞ்செய்கின்றன  என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒரு பிளாஷ் பேக் இருக்கு!
நான் நாலாம்பு அட்மிஷனுக்கு நாமக்கல் டவுன் இஸ்கூலுக்கு வந்தப்போ கிராமத்துல படிச்ச பையன் சரியா படிக்க மாட்டான்  என்று சொல்லி எங்க இருதய மேரி டீச்சர் தன வகுப்புல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.  இத்தனைக்கும் என் அம்மா, என் அப்பா இருவருமே அதே நிர்வாகத்தின் பள்ளியில் ஆசிரியர்கள். நான் சேர வந்த டவுன் இஸ்கூலுக்குத்தான் அன் அம்மாவுக்கும் டிரான்ஸ்பர் ஆகி இருந்தது. சக டீச்சரோட பையன் என்று கூட பார்க்காம எங்க டீச்சர் தன்னுடைய குவாலிட்டில கறாரா இருந்தாங்க. 

இருப்பினும் டவுன் இஸ்கூலின் தலைமை ஆசிரியர் சத்தியநாதன் அவர்கள் கொஞ்ச நாளுக்கு உங்க கிளாஸ்ல இருக்கட்டும். அதன் பிறகும் பையன் தேறலைன்னா வேற கிளாஸ்க்கு மாத்தி விடுறேன் என்று சமாதானப் படுத்தி அனுப்பி வெச்சார்

நான் சேர்ந்த இரண்டாம் நாளோ அல்லது மூன்றாம் நாளோன்னு நினைக்கிறேன். சேர்த்து எழுது என்ற பகுதியில் வளம் + செய்கின்றன  இதுக்கு விடை என்ன வரும்னு கேட்டாங்க. வகுப்பே முழிச்சது. அவங்க பார்வைல நல்லாப் படிக்கும் நகரத்துப் பசங்ககிட்டே எல்லாம் கேட்டாங்க. எவனுக்கும் தெரியல. நான் தானா முன்வந்து கையை உயர்த்தினேன்,
எங்கே சொல்லு பார்க்கலாம் என்று சொன்னாங்க "வளஞ்செய்கின்றன" என்றேன். வெரிகுட் என்று என்னைப் பாராட்டி பசங்க அத்தனை போரையும் கை தட்டச் சொன்னாங்க.


அடுத்த வாரத்தில் ஒரு நாள் துணிக் கடைக்கு ஆங்கிலத்தில் என்ன  என்று ஒரு கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதே போல அத்தனை பசங்களும் முழிக்க என் ஞாபகச் செல்களை உசுப்பி விட்டேன். திருச்செங்கோடு கடைவீதியில் அப்பாவின் கை பிடித்துக் கொண்டு நடந்த நாட்கள் நினைவில் வந்தது. அப்போவெல்லாம் வேடிக்கை பார்க்கும்போது கடையின் பெயர்ப்பலகைகளை படித்துக் கொண்டே போவது வழக்கம். பல கடைகளின் பெயர்களை ஆங்கிலத்தை தமிழில் எழுத்தில் இருப்பார்கள். அப்படி ஒன்றை படித்த பெயர் சட்டென நினைவில்  வந்தது "முருகன் கிளாத் ஸ்டோர்".

இன்றும் நானாக கையை உயர்த்தினேன். முதல் ஆளாக. "கிளாத் ஸ்டோர்" என்ற விடையைச்  சொல்லி   கைதட்டு வாங்கினேன். அதன் பிறகு தலைமை ஆசிரியடம் சென்று வேறு வகுப்புக்கு மாற்ற வேண்டாம், என் கிளாசிலேயே இருக்கட்டும் என்று தக்க வைத்துக் கொண்டார்கள் வகுப்பின் முதல் மாணவனை. 

No comments:

Post a Comment